பண நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானில், செலவினங்களை குறைக்கும் நோக்கத்துடன் தேவையற்ற செலவுகளை நிறுத்துவது என அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் வருகையின்போது, இவற்றை பயன்படுத்துவது இனி நிறுத்தப்படும்.
பிரதமர் ஷெரீப்பின் உத்தரவின் கீழ் இத்தடை அமுலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அரசு நடைமுறையின்படி வெளிநாட்டு தலைவர்கள் வருகையின்போது, சிவப்பு கம்பளங்கள் பயன்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையால், பணம் சேமிக்கப்படுவதுடன், பொதுமக்களின் நிதி பொறுப்புடன் செலவிடப்படுவதற்கான நோக்கம் செயல்படுத்தப்படும்.
பாகிஸ்தானின் பொருளாதார மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பிரதமர் மற்றும் அமைச்சவை உறுப்பினர்கள் தங்களுடைய சம்பளம் மற்றும் பிற பலன்களை விருப்பத்துடன் விட்டு கொடுப்பது என கடந்த வாரம், முடிவு செய்யப்பட்டது. இதேபோன்று, பாகிஸ்தானின் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியும், தன்னுடைய சம்பளம் மற்றும் பிற பலன்களை விட்டு கொடுப்பதாக தீர்மானித்துள்ளார்.
நன்றி தமிழன்