ஈரானின் தாக்குதல் அச்சம் காரணமாக, இஸ்ரேலில் உள்ள தனது ஊழியர்களின் பயணத்தை குறைக்குமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
ஜெருசலேம், டெல் அவிவ் அல்லது பீர் ஷேவா பகுதிகளுக்கு வெளியே பயணிக்க வேண்டாம் என்று தனது ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த 11 நாட்களுக்கு முன்பு சிரியாவில் உள்ள ஈரான் துணைத் தூதரகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி 13 பேரைக் கொன்றதற்கு பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதியளித்துள்ளது.
தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஈரானின் உயரடுக்கு பாதுகாப்புப் படைகளின் மூத்த தளபதி மற்றும் பல இராணுவத் தலைவர்களும் அடங்குவர்.
தூதரக தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை, ஆனால் இஸ்ரேலிய படைகள் இதற்கு பின்னணியில் இருப்பதாக நம்பப்படுகிறது.
காஸா பகுதியில் இஸ்ரேலுக்கு எதிராகப் போரிடும் பாலஸ்தீனப் போராளிக் குழுவையும், இஸ்ரேலை அடிக்கடி தாக்கும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா போன்ற குழுக்களையும் ஆதரிக்கும் நாடாக ஈரான் கருதப்படுகிறது.
இதற்கிடையில், ஜெர்மன் விமான நிறுவனமான லுஃப்தான்சா, ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கான விமானங்களின் இடைநிறுத்தத்தை சனிக்கிழமை வரை நீட்டித்துள்ளது.