தைவானில் இன்று காலை மேலும் ஒரு தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டது, அங்கு சமீபத்தில் வலுவான நிலநடுக்கம் காரணமாக 13 பேர் இறந்தனர்.
யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வின் படி, அதன் வலுவான நடுக்கம் 6.1 ரிக்டராக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சொத்து சேதமோ, உயிர் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.
நேற்றிரவு முதல் இன்று காலை வரை தைவானின் கிழக்குக் கடற்கரையில் 80க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன, மேலும் சிலவற்றால் தலைநகர் தைபேயிலும் கட்டிடங்கள் குலுங்கின.
இந்த நிலநடுக்கங்கள் பெரும்பாலும் ஹுவாலியன் பகுதியில் மையம் கொண்டுள்ள நிலையில் கடந்த 3ஆம் தேதி ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக நிலநடுக்கம் ஏற்பட்டதில் இருந்து நூற்றுக்கணக்கான அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமாக கடந்த 3ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் கருதப்படுகிறது.
இன்று ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் மையம் ஹுவாலியன் நகருக்கு தெற்கே 28 கிலோமீட்டர் தொலைவில் 10.7 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 4.5 முதல் 6 வரை இருந்தன, மேலும் ஹுவாலியன் அருகேயும் பதிவாகியுள்ளன.
தைவான் தொடர்ந்து வலுவான பூகம்பங்களை எதிர்கொள்ளும் ஒரு நாடு என்பதால், கடுமையான கட்டுமானச் சட்டங்கள் மற்றும் பூகம்பங்கள் பற்றிய பொது விழிப்புணர்வு உள்ளது.
1999 இல், தைவானில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2,400 பேர் கொல்லப்பட்டனர்.