கடந்த வருடத்தில் இலங்கை படகுகள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு வருகை தந்த சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என அவுஸ்திரேலிய அவசரகால அதிரடிப் படை தெரிவித்துள்ளது.
ஒரு வருடத்திற்கும் மேலாக இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு எந்த படகுகளையும் பார்க்கவில்லை என அவசரகால அதிரடிப்படையின் இறையாண்மை எல்லை நடவடிக்கைகளின் தலைவர் மார்க் வைட்சர்ச் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கையான ‘திசி ரலா’வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடலோர அலை நடவடிக்கையானது கடல் சூழலைப் பாதுகாக்கும் பொறுப்பை வலியுறுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய வைட்சர்ச், மனித கடத்தல் போன்ற சிக்கலான பிரச்சனைகளுக்கு ஒருங்கிணைந்த தீர்வுகள் தேவை என்றார்.
பொது மக்களின் தலையீடு இன்றியமையாதது எனவும், மனித கடத்தலை தடுப்பதில் சமூகத்திலிருந்து பெறப்படும் தகவல்கள் மிக முக்கிய பங்காற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடத்தல்காரர்களுக்கு மனித உயிர் மீது எந்த மதிப்பும் இல்லை, அவர்களின் கவனம் லாபம் சம்பாதிப்பதில் மட்டுமே உள்ளது.
எனவே, இவ்வாறான குற்றச் செயல்களில் இருந்து மக்களைப் பாதுகாக்க அவுஸ்திரேலியாவும் இலங்கையும் அயராது பாடுபடுகின்றன என மார்க் வைட்சர்ச் வலியுறுத்தியுள்ளார்.
அதன்படி, கடந்த வருடத்தில் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயற்சித்த படகுகள் எதுவும் அவதானிக்கப்படவில்லை என்பதுடன், செயற்பாடுகள் பயனுள்ளதாக இருப்பதை இது நிரூபிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.