2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கால்பந்து மைதானத்தில் தீவிரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்ட 18 வயது இளைஞனை பிரான்ஸ் பாதுகாப்பு படையினர் Saint-Etienne இல் கைது செய்துள்ளனர்.
இஸ்லாமியர்களுடன் குறியிடப்பட்ட செய்திகளை பரிமாறிய சந்தேக நபரின் தொலைபேசி மற்றும் கணினியில் மைதானத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் காணப்பட்டதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாரிஸ் ஒலிம்பிக்கின் பல கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ள Saint-Etienne இல் உள்ள Geoffroy-Guichard கால்பந்து மைதானத்தை தாக்குவதே சந்தேகநபரின் திட்டமாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரான்ஸ் உள்துறை அமைச்சரை மேற்கோள்காட்டி, சந்தேக நபர் பார்வையாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரை இலக்கு வைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தத் தயாராக இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்லாமிய சித்தாந்தவாதி என கூறப்படும் இளைஞன் யார் என்பது இதுவரையில் வெளியாகவில்லை எனவும், பயங்கரவாத சதிச் செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் பாதுகாப்பிற்காக 20,000 ராணுவ வீரர்கள் மற்றும் 40,000 போலீசார் மற்றும் 2,000 வெளிநாட்டு ராணுவம் மற்றும் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.