இந்த ஆண்டு ஹஜ்ஜின் போது 1300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சவுதி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இறந்த 1,301 பேரில் 83 சதவீதம் பேர் அங்கீகரிக்கப்படாத யாத்ரீகர்கள் என்று சவுதி சுகாதார அமைச்சர் ஃபஹ்த் பின் அப்துர்ரஹ்மான் அல்-ஜலாஜெல் தெரிவித்தார்.
ஹஜ் கிரியைகளை மேற்கொள்வதற்காக அதிக வெப்பநிலையில் நீண்ட தூரம் நடந்து சென்றதன் காரணமாகவே இவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சவூதி அரசாங்க ஊடக நிறுவனத்திடம் பேசிய அமைச்சர், 95 யாத்ரீகர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் ஒரு குழு சிகிச்சைக்காக ரியாத்துக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டதாகவும் கூறினார்.
உயிரிழந்த யாத்ரீகர்கள் பலரின் அடையாள ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் அடையாளம் காணும் நடவடிக்கை தாமதமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது உயிரிழந்தவர்களில் சிட்னியில் வசிக்கும் 46 வயதுடைய ஒருவரும் அடங்குவார்.
இறந்தவர்களில் 660 க்கும் மேற்பட்ட எகிப்தியர்கள் அடங்குவர், அவர்களில் 31 பேரைத் தவிர மற்ற அனைவரும் அங்கீகரிக்கப்படாத யாத்ரீகர்கள் என்று கெய்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
சவூதி அரேபியாவிற்கு சட்டவிரோத யாத்ரீகர்கள் செல்ல உதவிய 16 பயண நிறுவனங்களின் உரிமத்தையும் எகிப்து ரத்து செய்துள்ளது.
சவுதி அதிகாரிகளின் தகவல்களின்படி, இந்த ஆண்டு 22 நாடுகளில் இருந்து 1.6 மில்லியனுக்கும் அதிகமான யாத்ரீகர்கள் ஹஜ்ஜுக்கு வந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, 222,000 சவூதி குடிமக்கள் கொண்ட குழுவில் 1.83 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மத சடங்குகளுக்காக இணைந்துள்ளனர்.