மெல்போர்ன் ரிச்மண்ட் ரயில் நிலையத்தில் இனந்தெரியாத ஒருவரால் ரயில் தண்டவாளத்தில் தள்ளப்பட்ட பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவசர சேவை குழுக்கள் நேற்று மாலை 4 மணிக்கு முன்னதாக ரிச்மண்ட் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டதாகவும், அதற்குள் அந்த பெண் பயணிகளால் ரயில் தண்டவாளத்தில் இருந்து இழுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இப்படி தள்ளப்பட்ட பெண்ணின் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, சிகிச்சைக்காக அல்பிரட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
ரிச்மண்ட் ஸ்டேஷனின் 4வது நடைமேடையில் ரயிலுக்காக காத்திருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பின்னால் வந்து தண்டவாளத்தில் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.
பெண்ணை தள்ளிவிட்ட சந்தேகநபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸாரின் விசாரணைகள் காரணமாக சதர்ன் கிராஸ் போன்ற ரயில் நிலையங்களில் பயணிகள் ரயில் காலதாமதத்தை எதிர்கொள்ள நேரிட்டதாகக் கூறப்படுகிறது.