வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மாரிடேனியா அருகே அட்லாண்டிக் கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 89 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த மீன்பிடி படகிலிருந்து 89 உடல்களை மாரிடேனியா கடலோரக் காவல் படையினா் மீட்டனா். மேலும், அந்தப் படகிலிருந்து 5 வயது சிறுமி உள்பட 9 போ் உயிருடன் மீட்கப்பட்டனா்.
செனகல் மற்றும் காம்பியாவிலிருந்து 170 பேரை ஏற்றிக்கொண்டு ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது அந்தப் படகு கடந்த வாரம் விபத்துக்குள்ளானதாக மீட்கப்பட்டவா்கள் தெரிவித்தனா். அந்த வகையில், படகிலிருந்த 72 போ் மாயமாகியுள்ளனா் என்று அதிகாரிகள் கூறினா்.
அட்லாண்டிக் கடல் வழித் தடத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மிக மோசமான அகதிகள் படகு விபத்து இது என்று கூறப்படுகிறது.