Newsசம்பந்தரைத் தோற்கடித்தவர்கள் – நிலாந்தன்

சம்பந்தரைத் தோற்கடித்தவர்கள் – நிலாந்தன்

-

யாழ்ப்பாணம், தந்தை செல்வா கலையரங்கில், சம்பந்தரின் உடல் வைக்கப்பட்டிருந்த பொழுது அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் போன்ற நூற்றுக்கணக்கானவர்களே அங்கு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். தமது கட்சியின் முதுபெரும் தலைவரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக் கணக்கானவர்களைத் திரட்ட வேண்டும் என்று ஏன் ஏற்பாட்டாளர்கள் சிந்திக்கவில்லை? உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாக இருந்த கட்சிக்காரர்களும் உட்பட ஒரு தொகுதி கட்சித் தொண்டர்களைத் திரட்டியிருந்தாலே அங்கே ஆயிரக்கணக்கானவர்களைக் கொண்டு வந்திருக்கலாம்.

அஞ்சலி நிகழ்வு நடைபெற்ற மண்டபத்துக்கு அருகே யாழ் மத்திய கல்லூரி வழமை போல இயங்கியது. மண்டபத்தில் ஒலித்த சோக கீதத்தைத் தாண்டி பள்ளிக்கூடப் பிள்ளைகளின் இரைச்சல் கேட்டது. யாழ் நகரம் வழமை போல இயங்கியது. கடைகள் பூட்டப்படவில்லை; நகரத்தின் விளம்பர ஒலிபெருக்கிகளில் வழமை போல சினிமா பாடல்கள் ஒலித்தன. சோக கீதம் ஒலிக்கவில்லை. நகரத்தில் துக்கத்தின் சாயலைக் காண முடியவில்லை. சம்பந்தரின் பூத உடல் பலாலி விமான நிலையத்திலிருந்து தந்தை செல்வா கலையரங்கை நோக்கி வந்த வழி நெடுக மக்கள் திரண்டு நின்று துக்கத்தை வெளிப்படுத்தவில்லை. அப் பூதவுடலை யாழ்ப்பாணத்திலிருந்து வழியனுப்பி வைத்த பொழுதும் மக்கள் திரண்டு நின்று வணக்கம் செய்யவில்லை.

ஆனால் தந்தை செல்வாவின் பூதவுடல் தெல்லிப்பளையிலிருந்து முற்ற வெளியை நோக்கி வந்த பொழுது வழிநெடுக மக்கள் திரண்டு நின்றார்கள். சில இடங்களில் சில கிலோமீட்டர் தூரம் வரை ஊர்வலம் நீண்டு சென்றதாகத் தகவல். அது ஒரு தேசிய துக்க நிகழ்வாக அனுஷ்டிக்கப்பட்டது. மக்கள் தன்னியல்பாக செல்வாவை தந்தை என்று அழைத்தார்கள்.தன்னியல்பாக ஆயிரக்கணக்கில் அவருடைய இறுதி ஊர்வலத்தில் திரண்டார்கள். ஆனால் சம்பந்தருக்கு அது நடக்கவில்லை. ஏன் ?

ஈழத் தமிழர்களின் நவீன அரசியலில் மிக நீண்ட காலம், இறக்கும்வரை பதவியில் இருந்த ஒரு தலைவர் அவர். தமிழ் மக்களின் தலைநகரம் என்று வர்ணிக்கப்படுகின்ற திருகோணமலையின் பிரதிநிதி. ஆயுதப் போராட்டத்திற்கு முந்திய மிதவாத அரசியல், ஆயுதப் போராட்டம், ஆயுதப் போராட்டத்திற்குப் பிந்திய மிதவாத அரசியல் ஆகிய மூன்று கட்டங்களையும் தொடுக்கும் மூத்த அரசியல்வாதி. எல்லாவற்றையும் விட முக்கியமாக கிழக்கில் இருந்து எழுச்சி பெற்றவர். அப்படிப்பட்ட ஒரு மூத்த அரசியல்வாதிக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு அஞ்சலி செய்யாதது ஏன்?

ஏனென்றால், சம்பந்தர் இறக்கும்பொழுது ஏறக்குறைய தோல்வியுற்ற ஒரு தலைவராகவே இறந்தார்.

சிங்கள பௌத்த அரசு கட்டமைப்புக்கு முன்னப்பொழுதையும் விட அதிகம் விட்டுக்கொடுப்பதன் மூலம் ஒரு தீர்வைப் பெறலாம் என்று அவர் கற்பனை செய்தார். அதில் தோல்வியடைந்தார். எனவே அவரை முதலில் தோற்கடித்தது சிங்கள பௌத்த அரசுக்கட்டமைப்புத்தான்.

ஆயுத மோதல்களுக்கு பின்வந்த மிதவாத அரசியலின் தலைவரான அவர் நீட்டிய கரத்தை இறுகப் பற்றிக்கொண்டு சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பானது ஒரு தீர்வைக் கண்டுபிடிக்கத் தயாராக இருந்திருந்தால். சம்பந்தரின் வழி வெற்றி பெற்றிருக்கும். ஆனால் சிங்கள பௌத்த அரச கட்டமைப்பு ராணுவ வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்ற விரும்பவில்லை. அதைவிட முக்கியமாக அது அரசியல் வெற்றியாக மாற்றப்பட முடியாத ஓர் இனப்படுகொலை. ராஜபக்சக்கள் அந்த வெற்றியை ஒரு கட்சியின் அடித்தளமாக மாற்றினார்கள்.அதன் மூலம் யுத்த வெற்றிவாதத்திற்கு தலைமை தாங்கினார்கள்.

யுத்த வெற்றிவாதம் எனப்படுவது சம்பந்தருடைய விட்டுக் கொடுக்கும் அரசியலுக்கு எதிரானது.யுத்த வெற்றிவாதமானது தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் பொழுது சம்பந்தர் மட்டும் தனிக்குரலில் “ஒன்றுபட்ட இலங்கைக்குள்; பிரிக்கப்படாத இலங்கைக்குள் ; பிரிக்கப்பட முடியாத இலங்கைக்குள்” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆயுத மோதல்களுக்குப் பின் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து கிடைத்த அப்படிப்பட்ட ஒரு தலைவரை சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு உரிய முக்கியத்துவம் கொடுத்து பொருத்தமான விதத்தில் கையாளத் தவறியது. அவருடைய விட்டுக் கொடுப்புகளுக்கு பரிசாக எதிர்க்கட்சித் தலைவரின் வீடு அவர் இறக்கும்வரை வழங்கப்பட்டது. அந்த வீட்டை ஏற்றுக்கொண்டதன் மூலமும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற ஸ்தானத்தை இழந்த பின்னரும் அந்த வீட்டை விடாது வைத்துக் கொண்டிருந்ததன் மூலமும் சம்பந்தர் போரினால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்துக்குத் தலைமை தாங்கும் தகுதியைக் குறைத்துக் கொண்டார்.

இப்படிப் பார்த்தால் சம்பந்தரை முதலில் தோற்கடித்தது சிங்கள பௌத்த அரசுக்கட்டமைப்புதான்.

இந்த விடயத்தில் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பை நம்புமளவுக்கு சம்பந்தர் ஏமாளியாக இருந்தாரா என்ற கேள்வி எழும். அல்லது அவர் தன் சொந்த மக்களின் போருக்கு பின்னரான கூட்டு உளவியலை விளங்கிக் கொள்ள முடியாத ஒரு தலைவராக இருந்தார் என்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லது விளங்கிக் கொண்ட போதிலும் அதற்கு விரோதமாக செயல்பட்டவர் என்று எடுத்துக் கொள்ளலாமா? அதனால்தான் அவருடைய அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடந்த பொழுது மக்கள் அதற்கு ஆயிரக்கணக்கில் திரண்டு வரவில்லையா?

இரண்டாவதாக, அவரை தோற்கடித்தது, அவருடைய அரசியல் வாரிசுகள். யாரை தன்னுடைய பட்டத்து இளவரசர்போல வளர்த்தாரோ, அவரே சம்பந்தரைக் குறித்து பொதுவெளியில் விமர்சிக்க தொடங்கினார். அவர் மற்றொரு வாரிசாக இறக்கிய விக்னேஸ்வரன் அவருக்கு எதிராகத் திரும்பினார். தனது சொந்த தேர்தல் தொகுதியில், திருகோணமலையில் தன்னுடைய வாரிசாக அவர் யாரை இறக்கினாரோ, அவர் தனக்குத் தெரியாமல் நியமனங்களைச் செய்கிறார் என்று புலம்பும் ஒரு நிலைமை ஏற்பட்டது. அதாவது தன் மிக நீண்ட அரசியல் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் சம்பந்தர் தனது சொந்தக் கட்சிக்காரர்களாலே மதிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.

குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் நடந்த கட்சித் தலைவருக்கான தேர்தலின் பின் கட்சி இரண்டாக உடைந்தது. கட்சிக்காரர்களே கட்சியை நீதிமன்றத்தில் கொண்டு போய் நிறுத்தினார்கள். தனது தாய்க் கட்சி உடைந்த போதும், அந்தக் கட்சியை கட்சிக்காரர்களே நீதிமன்றத்தில் கொண்டு போய் நிறுத்திய பொழுதும், அதைத் தடுக்கும் சக்தியற்றவராக, கையாலாகாத ஒரு தலைவராக, சம்மந்தர் காட்சியளித்தார். அதாவது அவருடைய இறுதிக் காலத்தில் அவருடைய கண் முன்னாலேயே அவருடைய தாய்க் கட்சி உடைக்கப்படுவதையும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதையும் கையாலாகாதவராக பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய அளவுக்கு அவர் தோற்கடிக்கப்பட்டிருந்தார்.

சம்பந்தரை அவருடைய வாரிசுகளே தோற்கடித்தார்கள். யாழ்ப்பாணத்தில் அவருடைய அஞ்சலி நிகழ்விலும் அவருடைய கட்சிக்காரர்கள் அவரை தோற்கடித்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஒர் அரசியல் தலைவரின் அஞ்சலி நிகழ்வு என்பதும் ஓர் அரசியல் நிகழ்வுதான். அதை அதற்குரிய கால முக்கியத்துவத்தோடு விளங்கி அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை கட்சிக்காரர்கள் செய்யத் தவறினார்கள்.அவரைப் பெருந்தலைவர் என்று அழைத்த கட்சிக்காரர்களே அந்த அஞ்சலி நிகழ்வை பிரம்மாண்டமானதாக ஒழுங்குபடுத்தத் தவறினார்கள். அல்லது அவர்களால் அவ்வாறு ஒழுங்குபடுத்த முடியாத அளவுக்கு மக்களின் கூட்டு மனோநிலை இருந்தது என்று எடுத்துக்கொள்ளலாமா?

அதனால் யாழ்ப்பாணத்தில் அந்த சாவீடு சோர்ந்து போன ஒரு சாவீடாகக் காட்சியளித்தது. யாழ்ப்பாணத்தில், சம்பந்தரின் அஞ்சலி நிகழ்விலும் அவர் தோற்கடிக்கப்பட்டார். அவருடைய வாரிசுகளும் அவருடைய விசுவாசிகளாகத் தங்களைக் காட்டிக்கொண்டவர்களும் அவர் இறந்த பின்னரும் அவரைத் தோற்கடித்து விட்டார்கள் என்று சொல்லலாமா?

Latest news

கஞ்சா நிறைந்த மருந்துகள் உயிருக்கு ஆபத்தானவை!

ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம் (AMA) மற்றும் ஆஸ்திரேலிய மருந்தகக் குழு ஆகியவை 98% க்கும் அதிகமான THC (Tetrahydrocannabinol) உள்ளடக்கம் கொண்ட கஞ்சா அடிப்படையிலான மருந்துகளின்...

சமீபத்திய தரவரிசையில் ஆஸ்திரேலியா பாஸ்போர்ட் எந்த இடத்தில் உள்ளது?

உலக பாஸ்போர்ட் தரவரிசையில் இந்த ஆண்டு ஆஸ்திரேலிய பாஸ்போர்ட் மேலும் சரிந்துள்ளது. 2025 ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின்படி, ஆஸ்திரேலியர்கள் 185 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். இதன் மூலம்...

உலகளாவிய சவாலாக உருவெடுத்துள்ள Antibiotics சிகிச்சைகள்

பாக்டீரியா நோய்களுக்கு எதிரான Antibiotics சிகிச்சைகளுக்கு எதிர்ப்பு உலகளவில் வேகமாக அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது. இதனை உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. உலகளவில் மக்களில் பொதுவான நிலைமைகளை ஏற்படுத்தும்...

உலகப் பட்டத்தை வென்ற மெல்பேர்ண் நகரம்

ஹாங்காங்கில் நடைபெற்ற 2025 உலக பயண விருதுகளில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் ஒரு முக்கிய விருதை வென்றுள்ளது.Oceania’s Leading City Destination for 2025-இற்கான சிறந்த விருதை...

உலகளாவிய சவாலாக உருவெடுத்துள்ள Antibiotics சிகிச்சைகள்

பாக்டீரியா நோய்களுக்கு எதிரான Antibiotics சிகிச்சைகளுக்கு எதிர்ப்பு உலகளவில் வேகமாக அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது. இதனை உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. உலகளவில் மக்களில் பொதுவான நிலைமைகளை ஏற்படுத்தும்...

உலகப் பட்டத்தை வென்ற மெல்பேர்ண் நகரம்

ஹாங்காங்கில் நடைபெற்ற 2025 உலக பயண விருதுகளில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் ஒரு முக்கிய விருதை வென்றுள்ளது.Oceania’s Leading City Destination for 2025-இற்கான சிறந்த விருதை...