உலக மக்கள் தொகை அடுத்த 50 முதல் 60 ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரிக்கும் எனவும் இந்த ஆண்டின் இறுதியில் 820 கோடியாக உயரும் என ஐ.நா சபை தெரிவித்துள்ளது.
அத்தோடு, 2080 ஆம் ஆண்டுகளின் மத்தியில் உலக மக்கள் தொகை சுமார் 1030 கோடியாக உச்சத்தை எட்டுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அதன்பின்னர் படிப்படியாக குறையத்தொடங்கி, நூற்றாண்டின் இறுதியில் 1020 கோடியாக இருக்கும் எனவும் ஐ.நா தெரிவித்துள்ளது.
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, உலக நாடுகளில் மக்கள் தொகை பெருக்கம் தொடர்பாக ஐ.நா. சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கு வந்த இந்தியா 2,100 ஆம் ஆண்டு வரை முதலிடத்தில் நீடிக்கும் எனவும் இந்த நூற்றாண்டு முழுவதும் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆணடில் இந்தியாவின் மக்கள்தொகை 145 கோடியாக இருக்கும் எனவும் இது 2054 ஆம் ஆண்டில் உச்சபட்சமாக 169 கோடியாக உயர்வதுடன் 2100 ஆம் ஆண்டின் இறுதியில் 150 கோடியாக குறையும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.