அமெரிக்காவில் இரண்டு பெண்களை கொடூரமாக கொலை செய்த நபருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 226 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உள்ளது.
தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த 53 வயதுடைய பிரையன் ஸ்டீவ் ஸ்மித் என்பவர் அமெரிக்க குடியுரிமை பெற்று அலஸ்கா மாகாணத்தில் வசித்து வந்துள்ளார்.
பாலியல் தொழிலாளியொருவர் இவரது காரிலிருந்து தொலைபேசியை திருடி அதிலிருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆராய்ந்து பார்த்தபோது இவர் இரண்டு பெண்களை கொடூரமாக கொன்றமை தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து, அந்த பெண் பொலிஸாருக்கு வழங்கிய புகாரைத் தொடர்ந்து, 2019இல் ஸ்மித் கைதுசெய்யப்பட்டார்.
விசாரணையில், அலஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதுடைய கேத்லீன் ஹென்றி என்பவரையும் 52 வயதுடைய வெரோனிகா அபூச்சுக் என்பவரையும் கொன்றதை ஸ்மித் ஒப்புக்கொண்டுள்ளார்.
அலஸ்காவின் ஆங்கோரேஜில் உள்ள ஹோட்டலொன்றில் கேத்லீன் ஹென்றியை கொடூரமாக கொன்று புதைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோல், அவரது மனைவி வீட்டில் இல்லாத போது, வெரோனிகாவை அழைத்துச் சென்றபோது இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை சுட்டுக் கொன்று புதைத்ததும் தெரியவந்தது.
இந்த வழக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளாக அலஸ்கா நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வந்த நிலையில் ஸ்மித் மீதான குற்றங்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நேற்று (13) இரு பெண்கள் கொல்லப்பட்ட வழக்கில் தலா 99 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பாலியல் பலாத்காரம், சாட்சியங்களை மறைத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 28 ஆண்டுகள் என மொத்தம் 226 ஆண்டுகள் சிறை தண்டனை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.