அவுஸ்திரேலியாவில் உழைக்கும் மக்களுக்கு 12 நாட்கள் சம்பளத்துடன் கூடிய இனப்பெருக்க விடுப்பு (Reproductive Leave) வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த திட்டமானது சுகாதார சேவை சங்கத்தால் முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது. மாதவிடாய் வலி, மாதவிடாய், பாலின மாற்றம், IVF மற்றும் vasectomies போன்ற நிலைமைகளுக்கு சிகிச்சைக்கான அணுகலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதன் மூலம் உழைக்கும் மக்கள் தங்கள் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அதன்படி, 12 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்புக்கு பரிந்துரை செய்யுமாறு மத்திய அரசுக்கு சுகாதார சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
உழைக்கும் மக்களின் விடுப்பு தொடர்பான விதிகளில் இந்த பிரேரணையை உள்ளடக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான பிரசாரங்களும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த பிரேரணையை ஏற்றுக்கொள்வதற்கு சுகாதார அமைச்சர் Mark Butler உள்ளிட்ட சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சுகாதார சேவைகள் சங்கம் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை திட்டம் இனப்பெருக்க சுகாதார நிலைமைகள் மற்றும் தொடர்புடைய புற்றுநோய் அபாயத்தை கட்டுப்படுத்த உதவும் மேலும் இது தனிநபர்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டு வரும்.
விக்டோரியாவில் உள்ள அரசு ஊழியர்களுக்கு நலன்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை சுகாதார சேவை சங்கம் ஏற்கனவே தொடங்கியுள்ளது, மேலும் குயின்ஸ்லாந்து அரசாங்கம் அதன் அனைத்து பொது ஊழியர்களுக்கும் 10 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு இதுவரை ஆதரவு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.