நியூ சவுத் வேல்ஸில் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
15 சதவீத ஊதிய உயர்வு கோரி தொழில்துறை நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று காலை 7 மணி முதல் 12 மணி நேரம் வெளிநடப்பு செய்யப்போவதாக செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் சங்கத்தின் (NSWNMA) உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள வேண்டாம் என கைத்தொழில் உறவுகள் ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன் காரணமாக நோயாளிகள் சிகிச்சை அறைகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதுடன் சிகிச்சை தொடர்பான பிற தாமதங்களும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்தத்தால் வரும் மணிநேரங்களில் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தீவிர நோயாளிகளின் அவசர சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் ரியான் பார்க் கூறினார்.
முன்னதாக திட்டமிடப்பட்டு இன்று மேற்கொள்ளப்படவிருந்த சத்திரசிகிச்சைகளை ஒத்திவைப்பதற்கும் மாநில சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஷே கேன்டிஷ் கூறுகையில், அரசு தனது உறுப்பினர்களின் கவலைகளுக்கு செவிசாய்க்காததால் இந்த வேலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.