ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹரிஸ் தேர்வானதை கொண்டாடும் விழாவில் A R ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக, ஒஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் A R ரஹ்மான் நேரடியான இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இந்திய-அமெரிக்கன் நிதி திரட்டும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆசிய-அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி அமைப்பு, அடுத்தமாதம் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாகவும், நிகழ்ச்சியில் A R ரஹ்மான், கமலா ஹரிஸ் கலந்து கொள்வார்கள் என்றும் உலகத் தரமான இசைக் கச்சேரி நேரடியாக உங்கள் வீடுகளுக்கே ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த இசைக் கச்சேரி குறித்து A R ரஹ்மான் தனது சமூக வலைதளங்களில் எந்தப் பதிவையும் பகிரவில்லை.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஆசிய-அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி அமைப்பு, அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹரிஸுக்கு தனது ஆதரவை அளித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகியதையடுத்து அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹரிஸ் ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அமெரிக்கர் மத்தியில் கமலா ஹரிஸுக்கு டிரம்பைவிட அதிக ஆதரவு கிடைத்துள்ளது.