சவுதி பட்டத்து இளவரசரான முகம்மது பின் சல்மான், தன் நாட்டை உலக சுற்றுலாத்தலமாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
அவ்வகையில், Saudi Vision 2030 என்னும் ஒரு திட்டத்தை அவர் முன்வைத்துள்ளார். NEOM என்னும் திட்டத்தின் கீழ், பாலைவனத்தில் ஒரு நீண்ட வரிசையில் The Line என்னும் ஸ்மார்ட் நகரத்தை உருவாக்குவதும் சல்மானின் கனவாகும்.
அவரது திட்டம் நன்றாக இருந்தாலும், அதனால் மனித உரிமை மீறல்கள் பல நடந்துவருவதாக கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சல்மானின் கனவு நகரத்தை உருவாக்கும் முயற்சியில், இதுவரை, 8 ஆண்டுகளில் சுமார் ஒரு லட்சம் புலம்பெயர் பணியாளர்கள் மாயமாகியுள்ளதாக அதிரவைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அத்துடன், இந்தியா, பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த 21,000 வெளிநாட்டுப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் ITV என்னும் ஊடகம் அதிரவைக்கும் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.
ஒரு வெளிநாட்டுப் பணியாளரைப்போல ரகசியமாக சவுதிக்குச் சென்று அந்த பணியாளர்களை சந்தித்த Noura என்னும் ஊடகவியலாளர் இந்த அதிரவைக்கும் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளார்.
சவுதிக்கு வேலைக்குப் போனால் நல்ல ஊதியம் கிடைக்கும், குடும்பத்தை முன்னேற்றிவிடலாம் என்னும் ஆசையில் சென்ற பணியாளர்கள் பலர் சவப்பெட்டியில் நாடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதற்கு உதாரணமாக, ராஜூ என்னும் நேபாளப் பணியாளரைக் கூறலாம். சரியான சாப்பாடும் தூக்கமும் இல்லாமல், வாரம் ஒன்றிற்கு 84 மணி நேரம் வர வேலை செய்து, ஊதியமும் கிடைக்காமல் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார் ராஜூ. ஒரு நாள் தனது அறையில் சடலமாக மீட்கப்பட்ட அவரை, கண்களில் கண்ணீரும் கோபமுமாக, தங்கள் கைகளில் சுமந்து வெளியே கொண்டுவந்துள்ளார்கள் அவரது சகப்பணியாளர்கள்.
தாங்கள் அடிமைகளைப்போல, பிச்சைக்காரர்களைப் போல நடத்தப்படுவதாகக் கூறி கண்ணீர் வடித்துள்ளார்கள் பலர். Noura என்னும் ஊடகவியலாளர் இந்த விடயங்களை வெளிக்கொணர்ந்துள்ள நிலையில், சவுதி போன்ற நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் வெளிநாட்டுப் பணியாளர்களின் அவல நிலையைக் காட்டும் வகையில் ஆவணப்படம் ஒன்று வெளியாகி கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.