சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள கங்குவா திரைப்படத்தின் படத் தொகுப்பாளர் நிஷாத் யூசூப், அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இயக்குநர் சிவா – நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், நவம்பர் 14-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்துக்கான ப்ரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், படத்தொகுப்பாளர் நிஷாத் யூசூப் இன்று காலை உயிரிழந்தார். 43 வயதாகும் நிஷாத், மலையாளம் மற்றும் தமிழ் மொழித் திரைப்படங்களுக்கு படத் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டு தல்லுமாலா படத்துக்காக சிறந்த படத்தொகுப்பாளருக்கான மாநில விருது நிஷாத்துக்கு வழங்கப்பட்டது. மேலும், உண்டா, ஒன், செளதி வெள்ளக்கா மற்றும் அடியோஸ் அமிகோஸ் உள்ளிட்ட பிரபல திரைப்படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
மேலும், சூர்யாவின் கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து, சூர்யா 45, மம்முட்டி மற்றும் மோகன்லால் நடிக்கும் திரைப்படங்களில் பணியாற்ற நிஷாத் ஒப்பந்தம் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கொச்சி பனம்பிள்ளி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில், புதன்கிழமை அதிகாலை உயிரிழந்த நிலையில், நிஷாத் யூசூப் கிடந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த கொச்சி பொலிஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணங்களால் உயிரிழந்தாரா என்பது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
ஏற்கெனவே கங்குவா திரைப்படத்தின் கலை இயக்குநர் மிலன் உயிரிழந்த நிலையில், படத் தொகுப்பாளரும் தற்போது மரணமடைந்துள்ளார்.
விடாமுயற்சி திரைப்படத்தின் பணிகளுக்காக அபர்பைஜான் சென்றிருந்த மிலன், அங்கு மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.