சுவிட்சர்லாந்து நாட்டில் முகத்தை மூடியபடி பொது வெளிகளில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நடைமுறை வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நடைமுறை சில நிபந்தனைகளுடன் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், விதியை மீறினால் ஆயிரம் சுவிஸ் பிராங்க்ஸ் அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக பெடரல் கவுன்சில் அறிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் இது தொடர்பான தீர்மானம் கடந்த 2021ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு முஸ்லிம் அமைப்புகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தது. அதே வேளையில் விமானங்களுக்குள், தூதரக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள், பிற புனித தளங்களிலும் மசூதிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தாது என்றும் ஆளும் பெடரல் கவுன்சில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல்நிலை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக முகத்தை மறைத்துக்கொள்ளலாம், ஆனால், மத ரீதியாக அல்லது தட்பவெப்ப நிலை காரணமாக செய்யக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
சிலர் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத போது, முகத்தை மூடிக்கொள்ளவும் முன் அனுமதி பெற்று வரலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.