பாதுகாப்பு விசா (துணைப்பிரிவு 866) தொடர்பில் பல தவறான தகவல்கள் பரப்பப்பட்டமையால், புலம்பெயர்ந்தோர் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக உள்நாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மாத்திரமே இந்த விசா வழங்கப்படுவதாக உள்நாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்து சட்டவிரோத குடியேற்றத்திற்கு ஆதரவளித்த வெளிநாட்டவரின் வீசாவை உள்நாட்டலுவல்கள் திணைக்களம் இரத்துச் செய்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 1000 வீசா விண்ணப்பதாரர்களுக்கு குடிவரவு ஆலோசனை வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட நபர் அதிக பணம் வசூலித்துள்ளதாகவும், அந்த விண்ணப்பதாரர்களை பாதுகாப்பு விசாவிற்கு (துணைப்பிரிவு 866) விண்ணப்பிக்குமாறு தவறாக அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறான வீசா விண்ணப்பங்கள் மூலம் அவுஸ்திரேலியாவில் புகலிடம் மற்றும் பாதுகாப்பு தேவைப்படுபவர்களின் வீசா அனுமதியில் தேவையற்ற தாமதங்கள் ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய சட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட குடிவரவு முகவர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் மட்டுமே புலம்பெயர்ந்தோருக்கு தேவையான உதவிகளை வழங்க கட்டணம் வசூலிக்க முடியும் என்று உள்துறை அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.