அமெரிக்காவில் Open AI நிறுவனம் மீது குற்றச்சாட்டு முன்வைத்த இந்திய வம்சாவளி இளைஞர் இறந்த நிலையில், அவரது கருவிகள் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வம்சாவளி இளைஞர் சுசிர் பாலாஜி Open AI நிறுவனத்தில் பணியாற்றினார். ஆனால், அந்நிறுவனம் பதிப்புரிமை விதிகளை மீறுவதாக கடந்த அக்டோபர் மாதம் குற்றம்சாட்டினார்.
அதன் பின்னர் கடந்த டிசம்பர் 14ஆம் திகதி, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தனது இல்லத்தில் சுசிர் பாலாஜி இறந்து கிடந்தார்.
துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் முதலில் தெரிவித்தனர். ஆனால் இளைஞரின் பெற்றோர் அதனை மறுத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடந்த அமெரிக்க புலனாய்வு அமைப்புக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் விசாரணையில் சுசிர் பாலாஜியின் அறையில் இருந்த சிசிடிவி கமெராக்கள், பென்டிரைவ் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. மேலும், சுசிர் ஹெட்போனில் பாடல் கேட்டுக் கொண்டிருந்தபோது, பின்பக்கமாக தலையில் சுடப்பட்டிருக்கலாம் என்றும், அவரது அறை சூறையாடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சுசிரின் கணினியில் இருந்த தரவுகளை யாரோ எடுத்திருப்பதாகவும் விசாரணை அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், பிரேத பரிசோதனை மற்றும் அவரது அறையில் நடத்தப்பட்ட தடயவியல் ஆய்வின் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.