சீனாவின் மலைப்பகுதியான திபெத் பகுதியில் நேற்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 95 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது. மேலும் 130 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
திபெத்தின் புனித நகரமான ஷிகாட்சேயில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகவும், 10 கி.மீ ஆழத்தில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.
அது தொடர் அதிர்வுகளைக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் தாக்கம் அண்டை நாடான நேபாளத்திலும், இந்தியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டது, ஆனால் நேபாளத்தில் இருந்து எந்த ஒரு சொத்து அல்லது உயிர் சேதமும் ஏற்படவில்லை.
இந்த நிலநடுக்கம் சீனாவில் அண்மைய ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான சோகம் என்று வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.