ஐ.நா. சபையின் தடையை மீறி வட கொரியா மீண்டும் ஓா் ஏவுகணையை வீசிப் பரிசோதனை நடத்தியுள்ளது. குறித்த ஏவுகணைப் பரிசோதனையானது கடந்த 6ம் திகதி இடம் பெற்றுள்ளது.
இது குறித்துத் தென் கொரிய முப்படைகளின் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பலிஸ்டிக் வகையைச் சோ்ந்த அந்த ஏவுகணை 1,100 கி.மீ. தொலைவுக்குப் பாய்ந்து சென்று கொரிய தீபகற்பத்துக்கும் ஜப்பானுக்கும் இடையிலான கடற்பகுதியில் விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களின் பிரத்தியோகப் பொருளாதார மண்டலத்துக்கு அருகே அந்த ஏவுகணை விழுந்தாலும், அதனால் தங்களின் கப்பல்களுக்கோ, விமானங்களுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியது.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் அன்டனி பிளிங்கன் தென் கொரியாவுக்கு வந்து சென்றதைக் கண்டித்து இந்த ஏவுகணைப் பரிசோதனை நடத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது.