AI தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தும் குற்றங்கள் ஆஸ்திரேலியா முழுவதும் அதிகரித்து வருகின்றன.
இத்தகைய பின்னணியில், சிட்னியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பள்ளி மாணவர் ஒருவர், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பள்ளி மாணவிகளின் புகைப்படங்களைத் திரித்து, ஆபாசமான காட்சிகளை உருவாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட மாணவன் பாடசாலையில் 12ஆம் தரத்தில் கல்வி கற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், அந்த புகைப்படங்களை பயன்படுத்தி போலி சமூக வலைதள கணக்குகளையும் உருவாக்கியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக மாநில கல்வித்துறை செய்தி தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகளை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது எனவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், விக்டோரியா மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவர் ஒருவர், பள்ளியில் படிக்கும் சுமார் 50 மாணவிகளின் நிர்வாண புகைப்படங்களை போலியாக உருவாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் Deep Fake ஆபாச வீடியோக்களை உருவாக்கி விநியோகிப்பதை தடுக்கும் மசோதாவையும் செனட் சபை நிறைவேற்றியுள்ளது.