இங்கிலாந்து நாட்டில் அவலட்சண முகத் தோற்றத்தை வெளிப்படுத்தும் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
வடமேற்கு இங்கிலாந்து நாட்டின் கும்பிரியா எனும் பகுதியில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அவலட்சணமான முகத் தோற்றத்தை வெளிப்படுத்தும் அசாதாரண போட்டியான, உலக கர்னிங் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த வருடம் அங்கு நடைபெற்ற கிராப் கண்காட்சியில் இப்போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் பங்குபெறும் போட்டியாளர்கள் அனைவரும் மேடையில் ஏறி தங்களது முகத்தை சுளித்து பல்வேறு வினோத பாவணைகள் செய்து அவலட்சணமான முகத் தோற்றத்தை உருவாக்கிக்காட்ட வேண்டும்.
அதில் யாருடைய முகம் அருவருப்பாகவும் அவலட்சணமான தோற்றத்தை வெளிப்படுகிறதோ அவருக்கு நடுவர்கள் அளிக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இதில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனிப் பிரிவாக போட்டிகள் நடத்தப்படுகிறது.
இந்த போட்டிகளில், டாமி மேட்டின்சன் என்பவர் 18 முறை உலக கர்னிங் சாம்பியன்ஷிப் வென்று உலக சாதனைப் படைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் அவரது அப்பா 10 முறை உலக கர்னிங் சாம்பியனாக இருந்ததாகவும், அந்த பாரம்பரியத்தை கடைபிடித்து தானும் இந்த போட்டியில் பங்கேற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.