பாகிஸ்தானில் ஏற்பட்ட சுரங்க விபத்தின் வாயுவெடிப்பில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்துள்ளது.
பாகிஸ்தானின் குவெட்டா நகரின் சஞ்ஜிதி பகுதியருகே அமைந்துள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் கடந்த 9ஆம் திகதி திடீரென வாயுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. சுரங்கத்தின் ஆழத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் பலர் வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தனர்.
இந்நிலையில், அவர்களை மீட்கத் தொடர்ந்து 3 நாட்களாக மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதில், முதலில் 4 பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டனர். 3000அடி ஆழத்தில் அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
அவர்கள் தவிர, 8 பேர் சுரங்கத்திற்குள் சிக்கியிருந்தனர். அவர்கள் 4,300 அடி ஆழத்தில் இருக்கக் கூடும் என கூறப்பட்டது.
இந்நிலையில், தொடர்ந்தும் இடம்பெற்ற மீட்பு பணியின் ஒரு பகுதியாக, மீதமுள்ளவர்களில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால்சுரங்க விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்துள்ளன.