இத்தாலியில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
டியூனிசியா நாட்டின் எஸ்ஃபாக்ஸ் துறைமுகத்திலிருந்து 56 அகதிகள் இறப்பர் படகில் மார்ச்17 அன்று பயணம் மேற்கொண்டிருந்தனர். பயணம் தொடங்கிய சில மணி நேரங்களில் அந்த படகில் ஓட்டை விழுந்து காற்று வெளியேறத் தொடங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நடுக்கடலில் தத்தளித்த 4 பெண்கள் உட்பட 10 பேர் மீட்கப்பட்டு இத்தாலியின் தெற்கு பகுதியிலுள்ள லான்பெதூஸா தீவிற்கு அழைத்து வரப்பட்டு ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையகத்தின் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மாயமான 46 அகதிகளில் 6 பேரது உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 40 பேரது நிலைகுறித்து எந்தவொரு தகவலும் தெரியவராத சூழலில் அவர்களை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆபிரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.