ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் பரவும் நிமோனியா வகை நோயினால் அரசு சுகாதார அவசரநிலை அறிவித்துள்ளது.
நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 5 பேருக்கு Legionnaires எனும் நோயின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மேலும், அவர்கள் 5 பேரும் சிட்னியின் மத்திய வர்த்தக மாவட்டத்திற்கு சென்று திரும்பியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவக்கும் கடந்த மார்ச் 30 முதல் ஏப்ரல் 4 வரையிலான காலக்கட்டத்தில் இந்நோயிக்கான அறிகுறிகள் தென்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தத் தொற்று பரவியதற்கான மூலக்காரணம் என்னவென்று தெரியவராத நிலையில் அதனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, Legionnaires என்பது Legionella எனும் நன்னீரில் வாழும் பாக்டீரியாவினால் ஏற்படும் ஒரு வகையான நிமோனியா காய்ச்சலாகும். இந்த பாக்டீரியாக்கல் மனித உடம்பினுள் சென்ற 2 – 10 நாள்களுக்குள் தலைவலி, காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளை வெளிக்காட்ட துவங்கும் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், காற்றில் பரவும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5-10 சதவிகிதம் உயிரிழக்கும் அபாயமுள்ளதெனவும், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டு அதற்கு முறையான சிகிச்சையளிக்கவில்லை என்றால் 80 சதவிகிதம் வரையில் உயிரிழக்கும் அபாயமுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.