Operation Sindoor குறித்து இராணுவ நடவடிக்கைகளின் தலைமை பணிப்பாளரான லெஃப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் கயி செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார்.
அவர் தெரிவித்திருப்பதாவது: “Operation Sindoor நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கையாகும். இதன்மூலம், தீவிரவாதச் செயல்களுக்கு சதித்திட்டம் தீட்டியவர்களும் தண்டிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தீவிரவாத உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதில் அங்கிருந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர்.
இந்திய தேசம்தீவிரவாதச் செயல்களை சகித்துக்கொள்ளாது என்பதையே மீண்டுமொருமுறை தெரிவித்துக்கொள்கிறோம்”.
”இந்தியாவிலுள்ள வெவ்வேறு உளவுப் பிரவுகளின் உதவியால் தீவிர ஆய்வுக்குப் பின், பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம்கள் இருக்கும் பல இடங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், 9 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் தீவிரவாதிகள் முகாம்கள் அமைத்திருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ளவை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்திருந்தன. இவற்றை துல்லியமாக தாக்கி அழித்துள்ளோம்.
மே 7 முதல் 10 வரையிலான காலகட்டத்தில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர் சண்டையில் பாகிஸ்தான் இராணுவத்தில் 35 – 40 வீரர்கள் உயிரிழந்திருப்பதாக பாகிஸ்தான் இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
மே 8 – 9 இரவில், இந்திய வான்வெளிக்குள் பாகிஸ்தான் ட்ரோன்களையும் போர் விமானங்களையும் ஏவியது.
மே 9 – 10 இரவில், ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்கள் மூலம் இந்திய வான்வெளிக்குள் ஊடுருவும் முயற்சி இந்திய விமானப் படை மற்றும் இராணுவத்தின் வான் வெளி பாதுகாப்பு அமைப்புகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன. இந்திய இராணுவ தளங்களைக் குறிவைத்து அவர்கள் மேற்கொண்ட நகர்வுகள் தோல்வியைச் சந்தித்துள்ளன” என்று கூறியுள்ளார்.