அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
திங்கட்கிழமை (உள்ளூர் நேரப்படி) காலை 9 மணிக்கு வெள்ளை மாளிகையில் இருந்து நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவேன் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதனால் அமெரிக்காவில் மருந்து விலைகள் 30 முதல் 80 சதவீதம் வரை கிட்டத்தட்ட உடனடியாக குறையும் என்று கூறப்படுகிறது.
ஜனாதிபதி ட்ரம்ப் தனது சமூக ஊடகப்பக்கத்தில் குறிப்பிடுகையில், தமது முடிவால் உலகமெங்கும் மருந்துகளின் விலை உயரக் கூடும் என்றும், இதனால் மருந்துகளின் விலை அனைத்து நாடுகளிலும் சமநிலையை எட்டும் என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.
மருந்து தொடர்பான ட்ரம்பின் நிர்வாக உத்தரவை, அமெரிக்க வரலாற்றில் மிகவும் விளைவு நிறைந்த நிர்வாக உத்தரவுகளில் ஒன்று என அவரது ஆதரவாளர்கள் ஏற்கனவே கொண்டாடி வருகின்றனர்.
ஆனால் ட்ரம்பின் இந்த முடிவை ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலக நாடுகள் கவலையுடனே எதிர்கொள்ள உள்ளனர். மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களை விட அமெரிக்க மக்கள் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்கு மூன்று முதல் நான்கு மடங்கு அதிகமாக பணம் செலுத்துகிறார்கள்.
இதனாலையே, ட்ரம்பின் இந்த நிர்வாக உத்தரவை அவரது ஆதரவாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். ஆஸ்திரேலிய மக்கள் தற்போது மருந்து சலுகைகள் திட்டத்தை அனுபவிக்கின்றனர்,
இது சில்லறை விற்பனையாளர்கள் மானிய விலையில் மருந்துகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்துவதால் மொத்த விற்பனை விலை குறைகிறது. இதனால் நோயாளிகள் மற்றும் வயதானவர்கள் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மலிவாக வாங்க முடியும்.
2023-2024 நிதியாண்டில் மருந்துகளுக்கு மானியம் வழங்குவதற்காக ஆஸ்திரேலிய அரசாங்கம் 17.7 பில்லியன் டொலர் தொகையை செலவிட்டுள்ளது. மேலும், ட்ரம்பின் முடிவால் அதிகரிக்கும் மருந்து விலைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் அதிக தொகையை செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
உயிர் காக்கும் மருந்துகளுக்கு மக்கள் இனி அதிகம் செலவிட வேண்டியிருக்கும். அதிக தொகை செலவிடாத நாடுகள் தனித்துவிடப்படுவார்கள் என்றும் நிபுணர்களால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.