‘நாங்கள் போரை கைவிட மாட்டோம். காஸாவில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும்’ என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 19ம் திகதி வெளியிட்டுள்ள காணொளியில் கூறியிருப்பதாவது, “சண்டை தீவிரமாக உள்ளது. நாங்கள் முன்னேறி வருகிறோம். காஸாவின் அனைத்துப் பகுதிகளையும் கட்டுப்பாட்டில் கொண்டு வருவோம்.
நாங்கள் போரை கைவிட மாட்டோம். வெற்றியை நோக்கி பயணிப்போம். அதே நேரத்தில், பஞ்சத்தைத் தடுக்க காஸா பகுதிக்குள் மனிதாபிமான அடிப்படையில் உணவு அளிக்க அனுமதிக்கப்படும்.
காஸா மக்கள் உணவின்றி பஞ்சத்தில் மூழ்க அனுமதிக்கக் கூடாது. இஸ்ரேல் மக்கள் கூட, பட்டினியால் காஸா மக்கள் அவதிப்பட்டு வருவதை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்” என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.