மழை நின்றிருக்கலாம், ஆனால் வெள்ள அவசரநிலை இன்னும் முடிவடையவில்லை என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
12-இற்கும் மேற்பட்ட நகரங்களில் சுமார் 50,000 மக்கள் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிகாரிகள் உணவு, மருந்து மற்றும் மின்சாரம் ஆகியவற்றை பகிர்ந்தளித்து வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில், 44 வெள்ள மீட்புப் பணிகள் உட்பட 864க்கும் மேற்பட்ட சம்பவங்களுக்கு அவசர சேவைகள் பதிலளித்துள்ளன.
மாநிலம் முழுவதும் இன்னும் 148 வெள்ள எச்சரிக்கைகள் அமுலில் உள்ளன. அவற்றில் 24 அவசர நிலை எச்சரிக்கைகள் அமுலில் உள்ளன.
பல பல்பொருள் அங்காடிகள் தங்கள் விளைபொருட்களை எல்லாம் இழந்துள்ளதால் உணவு பற்றாகுறை நிலவுகிறது.
தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம், சமூகங்களுக்கு உணவு விநியோகம், தொலைத்தொடர்பு மற்றும் மின்சாரம் ஆகியவற்றை மீட்டெடுக்க அதன் குழு கடுமையாக உழைத்து வருவதாகக் கூறியது.
வெள்ள அவசரநிலையின் உச்சம் முடிந்துவிட்டதாகத் தோன்றினாலும், இந்த சமூகங்கள் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகலாம்.
கிட்டத்தட்ட 10,000 சொத்துக்களுக்கு சேத மதிப்பீடு தேவைப்படும் என்று அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
வெள்ள நீரில் வாகனம் ஓட்டுவதையோ அல்லது நடந்து செல்வதையோ தவிர்க்குமாறு குடியிருப்பாளர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது.