ரஷ்யா-உக்ரைன் இடை யேயான போர் 3 ஆண்டு களுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கிறது. இப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதற்கிடையே சமீபத்தில் ரஷ்யா -உக்ரைன் இடையே முதல் முறையாக போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சு வார்த்தை துருக்கியில் நடந்தது.
ஆனால் பேச்சுவார்த்தைக்கு மத்தியிலும் இருதரப்பும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்குள்ள விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷ்யா மிகப்பெரிய அளவில் டிரோன்-ஏவுகணை தாக்கு தல்களை நடத்தியது. நகரின் பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதனால் மக்கள் நிலத்தடி சுரங்கப்பாதை நிலையங்ளில் தஞ்சமடைந்தனர். கீவ்வின் ஒபோலோன் மாவட்டத்தில் உள்ள ஒரு வணிக வளாகம் மற்றும் ஒரு குடியிருப்பு கட்டிடம் மீது டிரோன் விழுந்து வெடித்தது.
சோலோமியன்ஸ்கி மாவட்டத்தில் 2 இடங்களில் தாக்குதல் காரணமாக பெரிய அளவில் தீப்பிடித்து எரிந்தது. இந்த தாக்குதல்களில் பொதுமக்கள் 8 பேர் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில் துருக்கியில் நடந்த நேரடி பேச்சு வார்த்தையின்போது ஆயிரம் கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ள ரஷ்யாவும், உக்ரைனும் ஒப்பு கொண்டன. அதன்படி முதல் கட்டமாக கைதிகள் பரிமாற்றம் வடக்கு உக்ரைனில் உள்ள பெலாரஸ் எல்லையில் நடந்தது. இதில் இரு தரப்பில் இருந்தும் தலா 390 கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறும்போது, முதல் கட்டமாக 390 உக்ரேனியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். வார இறுதியில் மேலும் பலர் விடுவிக்கப்படுவார்கள். இது போரின் மிகப்பெரிய பரிமாற்றமாக மாறும் என்றார்.
நன்றி தமிழன்