தெற்கு மெல்பேர்ணில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். மூன்று ஆண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Park Street பகுதியில் ஒரு போலீஸ் அதிகாரி தனது துப்பாக்கியால் நான்கு முறை சுட்டதில் 34 வயது பெண் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக விக்டோரியா போலீசார் தெரிவித்தனர்.
குறித்த கார் காவல் அதிகாரியை நோக்கிச் சென்றதால் துப்பாக்கிச் சூடு நடந்ததாக காவல்துறை கூறியது.
காருக்குள் இருந்த 26 வயதுடைய ஒருவரின் காலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு காயமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கத்தியுடன் போலீசாரால் தேடப்பட்ட ஒரு நபரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருவருக்கும் உயிருக்கு ஆபத்தான காயங்கள் எதுவும் இல்லை, மேலும் வாகனம் மோதிய மூத்த கான்ஸ்டபிளும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
தெற்கு பெருநகரப் பகுதிக்கான செயல் உதவி ஆணையர் Therese Fitzgerald இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், சம்பவத்தின் போது அதிகாரியின் கால்களில் காயம் ஏற்பட்டதாகவும், காருக்கும் சுவருக்கும் இடையில் சிக்கிக் கொண்டதாகவும் கூறினார்.
நேற்று மாலை சுமார் 5 மணியளவில் Cecil தெருவில் ஒரு ஆண் கத்தியை வைத்திருந்ததாக வந்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இரண்டு அதிகாரிகள் அந்த நபரைக் கைது செய்து கொண்டிருந்தபோது, தெற்கு ஆஸ்திரேலிய எண் தகடுகளை கொண்ட திருடப்பட்ட Ford காரில் வந்த ஒருவர், மூத்த கான்ஸ்டபிளை நோக்கி ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பின்னர் அந்த அதிகாரி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக செயல் உதவி ஆணையர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.