சிட்னி சர்வதேச விமான நிலையம் வழியாக தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பயணி சென்றுள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதன் விளைவாக, ஜூன் 16 திங்கட்கிழமை காலை 8 மணிக்கு Vietnam Airlines விமானம் VN773 மூலம் சிட்னிக்கு வந்த அனைவரும் அறிகுறிகளைக் கவனிக்குமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், அன்று காலை 8:00 மணி முதல் 9:30 மணி வரை சிட்னியின் Kingsford Smith விமான நிலையத்தின் வருகை மற்றும் பொருட்கள் உரிமைகோரல் பகுதிகளில் இருந்தவர்களுக்கும் இந்த தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று ஏற்பட்ட 18 நாட்களுக்குப் பிறகு தட்டம்மை அறிகுறிகள் தோன்றும் என்பதால், இந்த பிரச்சினையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
தட்டம்மையின் அறிகுறிகளில் காய்ச்சல், கண்களில் வலி, இருமல் மற்றும் மூன்று நாட்களுக்குப் பிறகு உடலில் தோன்றும் சிவப்பு புள்ளிகள் ஆகியவை அடங்கும்.
விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் இந்த நோய்க்கு ஆளாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கும் நபர்கள் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ உதவியையோ அல்லது அவசர சிகிச்சைப் பிரிவையோ நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.