நச்சுப் பாசிகள் பரவுவதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உதவி வழங்குமாறு தெற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரையோரம் கடந்த மார்ச் மாதத்திலிருந்து தொடர்ந்து வரும் பாசிப் பூக்களால் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளது.
Fleurieu தீபகற்பத்தில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் பாசி, மாநிலம் முழுவதும் கடல்வாழ் உயிரினங்களை அழித்து, கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகளையும், உள்ளூர் சுற்றுலா, மீன்பிடித்தல் மற்றும் மீன்வளர்ப்புத் தொழில்களையும் சீர்குலைத்துள்ளது.
தெற்கு ஆஸ்திரேலிய முதன்மைத் தொழில்கள் மற்றும் பிராந்தியங்களுக்கான அமைச்சர் Clare Scriven, தனது கூட்டாட்சி பிரதிநிதி Julie Collins-இற்கு கடிதம் எழுதி, கடல் மீன்கள் இறந்து வருவதால் மாநிலம் முழுவதும் வணிக மீனவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் கடினமான காலகட்டத்தை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில், பிராந்திய சமூகத்தை மத்திய அரசு ஆதரிக்கும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.
மேலும், மத்திய அரசு இதை ஒரு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மீனவர்கள் தங்கள் உரிமங்கள் மற்றும் பிற கட்டணங்களைத் தள்ளுபடி செய்ய விண்ணப்பிக்கலாம் என்று மாநில அரசு முன்னர் அறிவித்திருந்தது.