அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், Wall Street Journal பத்திரிகை, அதன் உரிமையாளர் Rupert Murdoch உள்ளிட்ட பலரை எதிர்த்து 10 பில்லியன் அமெரிக்க டொலருக்கான அவதூறு வழக்கொன்றை மியாமி கூட்டாட்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Jeffrey Epstein மற்றும் ட்ரம்ப் இடையேயான நெருக்கமான தொடர்பு குறித்து, Wall Street Journal பத்திரிகை கடந்த 18ம் திகதி கட்டுரை ஒன்றை வெளியிட்டதாகவும் அதில் எப்ஸ்டீனின் 50வது பிறந்த நாளுக்கு ட்ரம்ப் கடிதம் ஒன்றை அனுப்பியதாகவும், அதில் நிர்வாண பெண்மணியின் படம் ஒன்றை வரைந்து, ‘இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஒவ்வொரு நாளும் மற்றொரு இரகசியத்தை உணரட்டும்’ என்று எழுதியதாகவும் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளதாகவும் இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ‘அது என்னுடைய வார்த்தைகள் இல்லை. நான் பேசும் விதமும் இல்லை. நான் படங்களையும் வரையமாட்டேன். இது தவறான, அவதுாறு பரப்பும் செய்தி’ என கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக பத்திரிகையின் உரிமையாளர் உள்ளிட்ட பலரை எதிர்த்து10 பில்லியன்அமெரிக்க டொலருக்கான இழப்பீடு கோரி, மியாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
‘இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம், அனைத்தையும் உறுதியான ஆதாரங்களுடன் தான் எழுதியுள்ளோம்’ என Wall Street Journal பத்திரிகை கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.