2025 ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதிகளுக்கு 25% வரி அறவிடப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
யுக்ரைன் மோதலுக்கு மத்தியில் இந்தியா, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் இராணுவ கொள்முதல்களில் ஈடுபடுவதை மையப்படுத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.
நட்பு நாடுகளாக இருந்தாலும், இந்தியாவின் அதிக வரிகள் உட்பட்ட விடயங்களால், இந்தியாவும் அமெரிக்காவும் மட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக தொடர்புகளைக் கொண்டுள்ளன என்று டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா தங்களின் நட்பு நாடாக இருந்தாலும், பல ஆண்டுகளாக இந்தியாவுடன், அமெரிக்கா ஒப்பீட்டளவில் சிறிய வியாபாரத்தையே மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் கட்டணங்கள் மிக அதிகமாக உள்ளன.
அத்துடன், அவை எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மிகவும் கடுமையான நாணயமற்ற வர்த்தக தடைகளைக் கொண்டுள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா வரலாற்று ரீதியாக ரஷ்யாவிலிருந்து பெரும்பாலான இராணுவ உபகரணங்களை கொள்வனவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் சீனாவுடன் சேர்ந்து ரஷ்யாவின் மிகப்பெரிய எரிசக்தி கொள்வனவு செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், ரஷ்யா யுக்ரைனில் கொலை செய்வதை நிறுத்த வேண்டும் என்று அனைவரும் விரும்பும் நேரத்தில் ஆகஸ்ட் முதல் இந்தியா 25% வரியை செலுத்தும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.