ஆஸ்திரேலியாவுக்கு காலநிலை தொடர்பான மிகப்பெரிய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் பருவநிலை மாற்றம் காரணமாக கடல் மட்டம் உயர்வதால் எதிர்வரும் 2050 ம் ஆண்டுக்குள் 1.5 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் ஆபத்தை எதிர் கொள்வார்கள் என முதல் தேசிய காலநிலை இடர் மதிப்பீட்டு அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.
இந்த 72 பக்க அறிக்கையானது பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய வெள்ளம், வறட்சி, சூறாவளி மற்றும் வெப்ப அலைகள் குறித்த சவாலான எதிர்காலத்தை எடுத்துரைத்துள்ளது.
இந்த பருவநிலை மாற்றத்தால் ஆஸ்திரேலியாவின் கடலோர பகுதிகள் பாதிக்கப்படும் என்றும், குறிப்பாக வடக்கு ஆஸ்திரேலியா மற்றும் முக்கிய புறநகர் பகுதிகளில் உள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள் என அறிக்கை எச்சரித்துள்ளது.
அதே சமயம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய மற்றும் தொடர்ந்து அதிகரித்து வரும் மோசமான நிலைமைகளில் இருந்து எந்தவொரு சமூகமும் தப்பிக்க முடியாது என்றும் அறிக்கை விளக்கியுள்ளது.
இந்த பருவநிலை மாற்றத்தால் $611 பில்லியன் மதிப்புள்ள ஆஸ்திரேலிய சொத்துக்களின் மதிப்புகள் குறைவதோடு குறிப்பிடத்தக்க பொருளாதார இழப்பும் ஏற்படும் என்றும் அறிக்கை எச்சரித்துள்ளது.
அதிகப்படியான வெள்ளம் மற்றும் காட்டுத்தீ காரணமாக ஆஸ்திரேலியாவில் குடிநீர் தரம் மோசமடையும் என்றும் அறிக்கை எச்சரித்துள்ளது.