பாகிஸ்தானின் லாகூரின் கஹ்னா பகுதியைச் சேர்ந்த ஜைன் அலி எனும் 17 வயது சிறுவனுக்கு 100 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Online PUBG விளையாட்டில் ஏற்பட்ட தாக்கத்தின் உச்சத்தில் தாயார் மற்றும் மூன்று சகோதரர்களை சுட்டுக்கொன்ற வழக்கிலேயே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு இச்சம்பவம் நடந்துள்ளது. அப்போது சிறுவனுக்கு 14 வயது ஆகும்.
குறித்த சிறுவன் PUBG விளையாட்டில் அடிமையாகயிருந்ததாகவும், இதனை தாய் கண்டித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் PUBG-இல் தனக்கான இலக்குகளை அடையமுடியாத சந்தர்ப்பங்களில் சிறுவன் ஆக்ரோஷமடைவதை வழக்கமாகவும் கொண்டுள்ளார்.
கொலை நடந்த அன்று, பல மணித்தியாலங்களாக PUBG விளையாடிய சிறுவன், ஒரு இலக்கை தவறவிட்டதால் ஆத்திரமடைந்துள்ளார்.
அதேநேரம் சிறுவன் அதிக நேரம் விளையாட்டில் மூழ்கியிருப்பதாக அவனது தாய் கண்டிக்கவே சிறுவனுக்கு மேலும் எரிச்சல் அதிகரித்தது.
இதனால் சிறுவனின் தாயார் நாகித் முபாரக், அண்ணன் தைமூர், இரண்டு சகோதரிகள், மஹ்னூர் மற்றும் ஜன்னத் ஆகியோர் உறங்கிக்கொண்டிருந்த சமயத்தில் வீட்டிலிருந்த கைத் துப்பாக்கியை எடுத்து சிறுவன் ஜைன் அலி அவர்களை சுட்டுக் கொன்றுள்ளான்.
விளையாட்டின் தீவிர தாக்கத்தால் இக்கொலை இடம்பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இவ்வழக்கை விசாரித்த லாகூர் நீதிமன்றம் நேற்று இத் தீர்ப்பை வழங்கியது.
குறித்த சிறுவனின் வயதை அடிப்படையாகக் கொண்டு, மரண தண்டனைக்குப் பதிலாக நான்கு வருடங்கள் ஆயுள் தண்டனை அதாவது, ஒரு கொலைக்கு 25 வருடங்கள் என மொத்தம் 100 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, 4 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.