கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையிலான போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
இந்த அமைதி ஒப்பந்தமானது, கடந்த 13ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் எகிப்து ஜனாதிபதி அல் சிசி தலைமையில் நடைபெற்ற காசா அமைதி உச்சி மாநாட்டில் கையெழுத்தானது.
ஒப்பந்தம் கையெழுத்தான பின்பும் ஹமாஸ் அமைப்பு மற்றும் இஸ்ரேல் படைகளுக்கிடையில் காஸாவில் தொடர் மோதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு தொடர்ந்து மீறி வருவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பில், செய்தியாளர்களுக்கு பதிலளித்த ட்ரம்ப்,
“அவர்கள் சரியாக நடந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் அழிக்கப்படுவார்கள். அவர்கள் இதையே செய்து கொண்டிருந்தால் நாங்கள் உள்ளே சென்று சரிசெய்ய வேண்டியிருக்கும். அது விரைவாகவும் வன்முறையான முறையிலும் நடக்கும்.
நான் கேட்டுக்கொண்டால் இஸ்ரேல் இரண்டு நிமிடங்களில் அங்கே செல்வார்கள். என்னால் அவர்களிடம் உள்ளே சென்று அதைப் பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூற முடியும். ஆனால், இப்போது நான் அதைக் கூறவில்லை. ஒரு சிறிய வாய்ப்பு கொடுக்கப் போகிறோம்” எனத் தெரிவித்தார்.