பெர்த்தில் உள்ள Melville நகர சபை வீட்டுப் பூனைகள் குறித்து சர்ச்சைக்குரிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, ஒரு வீட்டில் இரண்டு பூனைகளை மட்டுமே வளர்க்க முடியும். மேலும் சட்டத்தை மீறினால் $300 அபராதம் விதிக்கப்படும்.
புதிய சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு பதிவுசெய்யப்பட்ட அல்லது வளர்ப்புப் பராமரிப்பில் இருந்த பூனைகளைக் கொண்ட வீடுகளுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது.
Tompkins பூங்கா, Goolugatup Heathcote Reserve, Alfred Cove Nature Reserve மற்றும் Centennial Park போன்ற இயற்கை சூழல்களிலிருந்தும் பூனைகள் தடைசெய்யப்பட்டுள்ளன.
தடைசெய்யப்பட்ட பகுதிகளில் பிடிக்கப்படும் பூனைகளின் உரிமையாளர்களுக்கும் $300 அபராதம் விதிக்கப்படும்.
சில நிபந்தனைகளின் கீழ் குடியிருப்பாளர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட பூனைகளை வளர்ப்பதற்கான அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியும். பூனை உட்புற பூனையா அல்லது வெளிப்புற பூனையா என்பதை கவுன்சில் கணக்கில் எடுத்துக்கொள்ளும்.
Melville நகரம், CBD இலிருந்து தோராயமாக 8 கிமீ தொலைவில், Swan ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. மேலும் இது 200 பூங்காக்கள் மற்றும் காப்பகங்கள், 778 ஹெக்டேர் திறந்தவெளி பொது இடம் மற்றும் 295 ஹெக்டேர் புதர் நிலங்களைக் கொண்டுள்ளது.
பூனைகள் பூர்வீக வனவிலங்குகள் உட்பட பிற விலங்குகளை வேட்டையாடுவது, தீங்கு விளைவிப்பது மற்றும் கொல்வது மற்றும் அண்டை வீட்டாருக்கு பிரச்சினைகளை ஏற்படுத்துவது குறித்த புகார்களை கவுன்சில் பெற்றுள்ளது.
புதிய சட்டங்கள் வெளிப்புற பூனைகளின் எதிர்மறை தாக்கங்களிலிருந்து பூர்வீக வனவிலங்குகளைப் பாதுகாக்கும் என்று மேயர் Katy Mair கூறுகிறார்.
இருப்பினும், ஏராளமான உள்ளூர்வாசிகள் இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மேலும் கட்டுப்பாடுகள் குறித்து சமூக ஊடகங்களில் புகார் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், Melville நகர சபை கடந்த ஜூலை மாதம் பூனைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. மேலும் இது கடந்த சனிக்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று நகர சபை அறிவித்துள்ளது.
 
		




