பெண்களின் ஊதிய இடைவெளி அவர்களின் வயதைப் பொறுத்து மாறுபடும் என்று சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
Workplace Gender Equality Agency (WGEA) வெளியிட்டுள்ள அறிக்கை, 15 வயது முதல் 67 வயது வரையிலான முழு வேலை வாழ்நாளிலும், பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான வருமான இடைவெளியைக் கூட்டும்போது, பெண்கள் சராசரியாக $1.5 மில்லியன் குறைவாக சம்பாதிக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் Meraiah Foley கூறுகையில், குடும்பப் பராமரிப்புப் பொறுப்புகள் காரணமாக பெண்கள் பெரும்பாலும் பகுதிநேர வேலைகளைத் தேர்வு செய்கிறார்கள், இது அவர்கள் உயர் பதவிகளுக்குச் செல்வதைத் தடுக்கிறது.
இது பெண்கள் அதிக ஊதியம் பெறும் பதவிகளை அடைவதை கடினமாக்குகிறது என்று Meraiah Foley சுட்டிக்காட்டுகிறார்.
“Sticky Floor Effect” என்று அழைக்கப்படும் இந்த நிலைமை, பெண்கள் அதிக ஊதியம் பெறும் மேலாண்மை பதவிகளுக்கு பதவி உயர்வு பெறுவதைத் தடுக்கிறது என்று அவர் கூறுகிறார்.
பெண்கள் ஓய்வு பெறும்போது ஆண்களை விட குறைவான ஓய்வூதியத்தைப் பெறுகிறார்கள் என்றும், இதற்கு ஒரு தீர்வாக, தந்தையர்களுக்கு தனி பெற்றோர் விடுப்பு வழங்கும் “Use it or Lose it” என்ற நோர்டிக் அமைப்பு, பாலின ஊதிய இடைவெளியைக் குறைப்பதற்கான ஒரு முக்கிய உதாரணமாகக் கருதப்படுகிறது.
பணியிடத்தில் சமத்துவத்தை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், பெண்கள் நீண்ட காலத்திற்கு பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவார்கள் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் சம்பந்தப்பட்ட தரப்பினர் சரியான தலையீடுகளைச் செய்தால், பாலின ஊதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்கி அவர்களின் ஓய்வூதிய வருமானத்தை அதிகரிக்க உதவ முடியும்.





