இந்திய ஒருநாள் அணியின் துணைதலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் சிட்னி வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் சமீபத்தில் முடிந்தது. இரு அணிகளுக்கும் இடையில் ஒக்டோபர் 25 ஆம் திகதி நடைபெற்ற கடைசிப் போட்டியின்போது, அலெக்ஸ் கேரி அடித்த பந்தை பிடிக்க பாய்ந்து சென்ற இந்திய அணியின் துணை தலைவர் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடது வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, அவர் உடனடியாக ஆடுகளத்திலிருந்து வெளியேறிய நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பந்தைப் பிடிப்பதற்காக கீழே விழுந்ததில் அடிபட்டதில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு நெஞ்சுக்கூட்டு எலும்பு முறிந்து மண்ணீரலில் உள் இரத்தக் கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
இதனால், உடனடியாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் சாதாரணப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவர் தற்போது சிட்னி வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.





