ஆஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றான Bondi தாக்குதலைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் (NSW) காவல்துறை தரவுகளின்படி, அந்த மாநிலத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்டோர் 100க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளைப் பதிவு செய்துள்ளனர். மேலும் ஒருவர் 298 துப்பாக்கிகளை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலைமை பொதுமக்களின் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டி, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தேசிய அளவில் ‘துப்பாக்கி திரும்பப் பெறும் திட்டத்தை’ அறிவித்துள்ளார்.
1996 ஆம் ஆண்டு நடந்த போர்ட் ஆர்தர் படுகொலைக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்படும் மிகக் கடுமையான துப்பாக்கிச் சட்ட சீர்திருத்தம் இதுவாகும் என்று நம்பப்படுகிறது.
இதற்கிடையில், நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிறிஸ் மின்ஸ் கூறுகையில், ஒருவர் வைத்திருக்கக்கூடிய துப்பாக்கிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் புதிய சட்டம் வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.
விலங்குகளை வேட்டையாடுவதற்கோ அல்லது கட்டுப்படுத்துவதற்கோ இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான ஆயுதங்கள் தேவையில்லை என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இருப்பினும், விவசாயிகள் மற்றும் துப்பாக்கி சேகரிப்பாளர்கள் இந்த கட்டுப்பாடுகள் தங்கள் நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.





