Commonwealth வங்கி குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களிடம் நியாயமற்ற முறையில் வசூலித்த $68 மில்லியன் கட்டணத்தை திருப்பிச் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.
இந்தப் பணம் சுமார் ஐந்து ஆண்டுகளாக Centrelink பயனாளிகளின் கணக்குகளில் இருந்து கழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் (ASIC) நீண்ட விசாரணைக்குப் பிறகு காமன்வெல்த் வங்கியின் இந்த நிதி முறைகேடு தெரியவந்தது.
ஜூலை 2019 முதல் ஒக்டோபர் 2024 வரை, கணக்கு பராமரிப்பு கட்டணம் மற்றும் பிற கூடுதல் கட்டணங்களாக குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு $270 மில்லியன் நியாயமற்ற முறையில் வசூலிக்கப்பட்டதாக ASIC சுட்டிக்காட்டுகிறது.
ஆரம்பத்தில் இந்தப் பணத்தைத் திருப்பித் தர வங்கி மறுத்த போதிலும், கடுமையான அழுத்தத்தின் கீழ் அவர்கள் $68 மில்லியனைத் திருப்பித் தர ஒப்புக்கொண்டனர்.
இருப்பினும், மொத்தத் தொகையில் கால் பங்கை மட்டுமே செலுத்த முடிவு செய்ததற்கு நிதி ஆலோசகர்களும் ASICயும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே சிரமப்பட்டு, உணவு, பானம் மற்றும் மின்சாரக் கட்டணங்களைச் செலுத்த பணம் இல்லாமல் தவிக்கும் மக்களிடம் இதுபோன்ற கட்டணங்களை வசூலிப்பது நெறிமுறையற்றது என்று ASIC ஆணையர் ஆலன் கிர்க்லேண்ட் கூறுகிறார்.





