அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சந்திரனில் அணு மின் நிலையமொன்றை நிறுவ திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் இந்த இலட்சியத் திட்டம், சந்திர விண்வெளித் திட்டத்திற்கும் சீனாவுடன் ஒரு கூட்டு ஆராய்ச்சி நிலையத்தை நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
வரலாற்று ரீதியாக, ரஷ்யா விண்வெளியில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இருப்பினும், சமீபத்திய தசாப்தங்களில் அதன் ஆதிக்கம் குறைந்துள்ளது. தற்போது அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தப்படியாக ரஷ்யா உள்ளது.
ஆளில்லா லூனா-25 என்ற விண்கலத்தை ரஷ்யா ஒகஸ்ட் 2023 இல் ஏவியது. இருப்பினும் குறித்த விண்கலம் இலக்கை அடைவதற்கு முன்பே விபத்துக்குள்ளானது. இந்த விபத்து ரஷ்யாவின் விண்வெளி முயற்சியில் குறிப்பிடத்தக்க பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ரஷ்யாவின் அரச விண்வெளி நிறுவனமான Roscosmos, 2036 ஆம் ஆண்டுக்குள் சந்திர மின் நிலையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதைச் செய்ய லாவோச்ச்கின் அசோசியேஷன் விண்வெளி நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
இந்த ஆலையின் நோக்கம் ரஷ்யாவின் சந்திர திட்டத்திற்கு சக்தி அளிப்பதாகும், இதில் ரோவர்கள், ஒரு ஆய்வகம் மற்றும் கூட்டு ரஷ்ய-சீன சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலையத்தின் உட்கட்டமைப்பு ஆகியவை அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





