எலான் மஸ்க்கின் Grok என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தன்னுடைய ஆடைகளை டிஜிட்டல் முறையில் அகற்றியதாக கூறி, ஒரு பெண் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு பேட்டியளித்துள்ளார்
இது குறித்து அந்தப் பெண் கூறுகையில், தான் “ஒரு பாலியல் பிம்பமாக சுருக்கப்பட்டதைப்” போல உணர்வதாகத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில், பயனர்கள் அந்த சேட் போட்டிடம் பெண்களின் அனுமதியின்றி அவர்களின் ஆடைகளை நீக்கி, ஆபாசமான உடையில் தோன்றுமாறு செய்வது மற்றும் அவர்களைப் பாலியல் சூழல்களில் சித்தரிப்பது போன்ற பல செயறபாடுகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
க்ரோக் -ஐ உருவாக்கிய நிறுவனமான xAI, இது குறித்த கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. அதற்குப் பதிலாக, “பாரம்பரிய ஊடகங்கள் பொய் சொல்கின்றன” என்ற தானியங்கிப் பதிலையே வழங்கியது.
சமந்தா ஸ்மித் என்பவர் தனது புகைப்படம் மாற்றப்பட்டது குறித்து எக்ஸ் தளத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதற்குப் பதிலளித்த பலரும் தங்களுக்கும் இதே போன்ற அனுபவம் ஏற்பட்டதாகக் கூறியுள்ளனர். அதே நேரத்தில், வேறு சிலரோ சமந்தாவின் மேலும் பல படங்களை உருவாக்குமாறு க்ரோக்கிடம் கேட்டுள்ளனர்.
“அங்கே ஆடையில்லாமல் இருப்பது நான் இல்லை என்றாலும், அது என்னைப் போலவே இருந்தது. யாராவது என்னுடைய நிர்வாணப் படத்தையோ அல்லது பிகினி படத்தையோ உண்மையில் பதிவிட்டால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுமோ, அதே போன்ற அத்துமீறலாகவே இதையும் நான் உணர்கிறேன்” என்றும் தெரிவித்தார்.





