குயின்ஸ்லாந்துவாசிகள் மற்றும் அவர்களது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன், ‘டேனியல் சட்டத்தின்’ (Daniel’s Law) கீழ், தண்டனை பெற்ற குழந்தை பாலியல் குற்றவாளிகள் பற்றிய தகவல்களைக் கொண்ட ஒரு பொதுப் பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன்பு பரிதாபமாக கொலை செய்யப்பட்ட மாணவர் டேனியல் மோர்கோம்பின் பெற்றோர் பல வருடங்களாக நடத்திய போராட்டத்தின் விளைவாக இது அமைந்துள்ளது.
குயின்ஸ்லாந்து காவல்துறையால் இயக்கப்படும் இந்த வலைத்தளம், மூன்று நிலைகளில் தகவல்களை வழங்குகிறது.
முதல் கட்டத்தின் கீழ், காவல்துறையினரிடமிருந்து தப்பிக்கும் ஆபத்தான குற்றவாளிகளின் பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் பகிரங்கப்படுத்தப்படுகின்றன.
இரண்டாவது நிலை, குடியிருப்பாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள அதிக ஆபத்துள்ள குற்றவாளிகளைப் பற்றி அறிய வாய்ப்பளிப்பதை உள்ளடக்கியது.
நிலை 3, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் யாருடன் பழகுகிறார்களோ அவர்கள் பாலியல் குற்றவாளிகளா என்பதைச் சரிபார்க்க அனுமதிக்கிறது.
இந்தத் தகவலைப் பெற, குயின்ஸ்லாந்து ஓட்டுநர் உரிமம் மற்றும் குழந்தைத் தகவல் போன்ற சரிபார்ப்பு தேவை.
இருப்பினும், குற்றவாளிகளைத் துன்புறுத்தும் அல்லது தகவல்களைப் பகிரங்கமாகப் பகிர்ந்து கொள்ளும் நபர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று காவல்துறை எச்சரிக்கின்றது.
இதற்கிடையில், குழந்தைகளின் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை இது என்று குயின்ஸ்லாந்து அரசு கூறுகிறது.





