செவ்வாய்க்கிழமை பிற்பகல் Port Pirie அருகே பல ரயில் பெட்டிகள் தடம் புரண்டதை அடுத்து, நாட்டை இணைக்கும் முக்கிய சரக்கு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பகுதியளவு தடம் புரண்டதாக தகவல் கிடைத்ததை அடுத்து, Port Pirie-இல் இருந்து வடக்கே 57 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிழக்கு மேற்கு ரயில் பாதைக்கு மாலை சுமார் 5:40 மணியளவில் அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.
பாதுகாப்பு சோதனைகள் முடிந்ததும் தடம் புரண்ட வேகன்கள் மீட்டெடுக்கப்படும் என்று ஆஸ்திரேலிய ரயில் பாதைக் கழகம் (ARTC) தெரிவித்துள்ளது.
இது ரயில் பாதையை சேவையிலிருந்து நிறுத்தியுள்ளது, சிட்னியிலிருந்து பெர்த் வரை, மெல்பேர்ண் முதல் பெர்த் வரை மற்றும் அடிலெய்டு முதல் டார்வின் வரை செல்லும் அனைத்து சரக்கு வழித்தடங்களையும் பாதித்துள்ளது.
இந்த சம்பவத்தில் ரயில் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், தண்டவாள பழுதுபார்க்கும் பணிகள் திட்டமிடப்படும் என்றும் ARTC தெரிவித்துள்ளது.
தடம் புரண்டதற்கான காரணம் குறித்து தேசிய ரயில் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் விசாரித்து வருகிறது.





