நியூ சவுத் வேல்ஸின் தெற்கு கடற்கரை மற்றும் சிட்னி நகரைப் பாதிக்கும் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக, மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அரசாங்கம் அவசர ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது.
இன்று பிற்பகல் Wollongong-இல் உள்ள இல்லவர்ரா சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஒரு விபத்து ஏற்பட்டது.
வாகனத்தை ஓட்டி வந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே நேரத்தில் வாகனத்தில் இருந்த மற்றொருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மரங்கள் விழும் அபாயம் அதிகம் இருப்பதாக மாநில அவசர சேவைகள் (SES) எச்சரிக்கிறது.
சிட்னியின் தெற்கே உள்ள பகுதிகளில் மணிக்கு 90 மிமீக்கு மேல் கனமழை பெய்யும் என்றும், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sutherland, Gosford மற்றும் Wyong உள்ளிட்ட பல பகுதிகளில் வசிப்பவர்கள் வீட்டிலேயே இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
இதற்கிடையில், நிவாரணப் பணிகளுக்காக சுமார் 750 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்பதற்காக ஏராளமான மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.





