ஜப்பானில் உள்ள உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம் மீண்டும் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் ஃபுக்குஷிமா அணுமின் ஆலை கடுமையாகப் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் பெரும்பாலான அணுமின் நிலையங்கள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டன.
இயற்கை எரிவாயு வளங்கள் அற்ற ஜப்பானின் மின்சாரத் தேவைகளுக்காக அங்குள்ள அணுமின் நிலையங்களை மீண்டும் இயக்கும் நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளதுடன் வடக்கு மற்றும் தெற்கு ஜப்பானில் உள்ள சுமார் 13 அணுமின் நிலையங்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையமான ஜப்பானின் நிகாட்டா மாகாணத்தில் உள்ள காஷிவாசாகி-கரிவா ஆலை நேற்று (21ம் திகதி) முதல் மீண்டும் இயக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணுமின் நிலையத்தை இயக்குவதற்கு நிகாட்டா மாகாண ஆளுநர் கடந்த டிசம்பர் மாதம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால், இந்த ஆலை இயக்கப்படுவதற்கு நிகாட்டாவின் 60 சதவிகித மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது கருத்துக்கணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, நிகாட்டா மாகாணத்தில் பெய்யும் கடும் பனிப்பொழிவிலும் ஏராளமான மக்கள் காஷிவாசாகி-கரிவா ஆலையின் இயக்கத்தை எதிர்த்து அதன் நுழைவு வாயிலில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





